டாஸ்மாக் தலைமை அலுவகம் மற்றும் மதுபான ஆலைகள், தனியார் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்தது. கரூர், கோவை, சென்னையில் கடந்த 3 நாட்கள் நடந்த சோதனை குறித்து தற்போது அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அறிக்கையில் என்ன உள்ளது?
சோதனையில் ரூ.1000 கோடி மதிப்பிலான முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது எனக் கூறியுள்ள அமலாக்கத்துறை, டாஸ்மாக் போக்குவரத்து ஒப்பந்ததாரர்களுக்கு வருடத்திற்கு ரூ.100 கோடிக்கும் அதிகமாக பணம் செலுத்தியுள்ளதாக கூறியுள்ளது. டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் மதுபான ஆலைகளுக்குகிடையே நேரடி தொடர்பு உள்ள ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மோசடிக்கு முறையாகத் திட்டமிடப்பட்டு நிதி ஆவணங்களில் மாற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அமலாக்கத்துறை, மதுமான ஆலைகள் செலவுகளை போலியாக அதிகரித்து டாஸ்மாக்கில் இருந்து ரூ.1000 கோடிக்கும் மேல் கருப்பு பணத்தை திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலித்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மது பார் டெண்டர் விட்டதிலும் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தனது அறிக்கையில் கூறியுள்ளது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.