தமிழ்நாடு அரசு 2025-26 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் இலச்சினை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த இலச்சினையில், மத்திய அரசின் ரூபாய் சின்னமான ₹-க்கு பதிலாக, தமிழ் எழுத்தான ‘ரூ’பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம், தமிழின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது, தேசிய அளவில் இன்று பேசுபொருளாகி உள்ளது. இந்த மாற்றம் குறித்து விமர்சனம் செய்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அரசின் ரூபாய் சின்னத்தை மாற்றுவது முட்டாள்தனம் எனவும், ₹ என்ற அடையாத்தை வடிவமைத்த உதயகுமார், திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் தான எனவும் கூறியுள்ளார்.
ஏன் இலச்சினை மாற்றம்?: தமிழக அரசு விளக்கம்
தமிழக பட்ஜெட்டில் ரூபாய் இலச்சினை ₹ என்பதற்கு பதில் ரூ என மாற்றப்பட்டதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது., அதில், 15 அலுவல் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை முதல்வர் பயன்படுத்தியுள்ளார். இது தாய் மொழி தமிழ் மீதான பற்றை பறைசாற்றும் விதமாக உள்ளது. இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது இல்லை எனக் கூறியுள்ளது. மும்மொழிக் கொள்ளை தொடர்பாக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பனிப்போர் நடந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை, மாநிலத்தின் மொழி மற்றும்ம கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது என திமுகவினர் கூறி வருகின்றனர்.