மும்மொழிக் கொள்கை தொடர்பான விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாக உள்ள நிலையில், தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சி மும்மொழிக் கொள்கை எபிசோடு ஒளிபரப்பு செய்யப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நீயா நானா மும்மொழிக் கொள்கை எபிசோடு நிறுத்தம்
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. இதனால், மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கு மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் மும்மொழிக் கொள்கை ஆதரவாளர்களும், எதிர்பாளர்களும் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அந்த நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாக இருந்தது.
இதனை தொலைக்காட்சி நிறுவனமும் தனது சமூக வலைதள பக்கத்தில் மும்மொழிக் கொள்கை ஆதரவாளர்களும், எதிர்பாளர்களும் என்ற தலைப்பில் விளம்பரமும் செய்தது. பலரும் பார்க்க ஆர்வமாக இருந்த அந்த நிகழ்ச்சி திடீரென நேற்று இரவு அந்த விளம்பரம் சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு பின்னால் அரசியல் அழுத்தங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.
பாஜக காரணமா?
சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது தொடர்பாக, பிரதமர் மோடியை விமர்சித்து விகடன் நிறுவனம் கார்டூன் ஒன்றை வெளியிட்டது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின்பேரில், விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்படது. இந்த நிலையில், நீயா நானா நிகழ்ச்சியை ஒளிபரப்பும் நிறுவனத்தையும் பாஜக மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.