அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுகவில் மூத்த தலைவருமான செங்கோட்டையனுக்கும், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் என்ன நடக்கிறது?
ஜெயலலிதா இறப்புக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்களும், பல வழக்குகளும் சந்தித்து வருகின்றன. தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வரும் எடப்பாடி தலைமையிலான அதிமுக, தற்போது அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக கோவையில் அண்மையில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்ப, என்னை வாழ வைத்த தெய்வங்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாததால் விழாவில் கலந்துகொள்ளவில்லை எனக் கூறினார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. வேலுமணியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டபோது, அவரை சந்திப்பதை செங்கோட்டையன் தவிர்த்தார். இந்தநிலையில், நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதனை, செங்கோட்டையன் புறக்கணித்தார். அதேபோல் இன்றும் நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடுப்பான எடப்பாடி பழனிசாமி
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது குறித்து செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று கேள்வி எழுப்பினர். கடுப்பான அவர், இதற்கான பதிலை அவரிடமே போய் கேளுங்கள். தனிப்பட்ட பிரச்சனையை இங்கு பேசாதீர்கள், அவரவர்களுக்கு வேலை இருக்கும். இது சுதந்திரமாக செயல்படக்கூடிய கட்சி, யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம் எனப் பதில் அளித்தார். தேர்தல் நெருங்கும் வேலையில் அதிமுக உட்கட்சி மோதல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.