ஹட்சன் நிறுவனத்தின் ஆரோக்யா பால் விலை லிட்டருக்கு ரூ.4, தயிர் விலை கிலோவுக்கு ரூ.3ம் விலை உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று முதல் பால் விலையை உயர்த்தியுள்ள நிலையில், நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூ.82 ஆகவும், அரை லிட்டர் பால் ரூ.2 அதிகரித்து ரூ.40 ஆகவும் உயர்ந்துள்ளது.
பால் முகவர்கள் சங்கம் கண்டனம்
ஒரு மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக பால், தயிர் விலையை உயர்த்தியுள்ள ஹட்சன் நிறுவனத்திற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹட்சன் நிறுவனத்தின் தன்னிச்சையான விலை உயர்வு விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ள பால் முகவர்கள் சங்கம், பால் விலை உயர்வு பிற தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் எனவும் தெரிவித்துள்ளது. தனியார் பால் நிறுவனங்களின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பால் விலை உயர்வால் டீ கடைகள், உணவங்கள் ஆகியவற்றில் பெரும் தாக்கம் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. டீ, காபி, பால் குடிக்கும் சாமானியர்கள், தினக்கூலி ஊழியர்களின் பாதிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஹட்சன் நிறுவனம் பால் விற்பனை விலையை உயர்த்தியதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.